Posts

Showing posts from July, 2024

நிலா

  குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன.

நிலவு

  நிலவே இங்கு எல்லோருக்கும் நீ லவ்வு… அதனால்தானோ தூரத்தில் இருக்கின்றாய்.   நிலவே… உனக்கும் வியாதியா என்ன? நேற்று மங்கலாய் வந்தவள் இன்று வரவே இல்லையே என்ன ஆச்சர்யம்… இந்த மனிதர்களோடு நீயும் சேர்ந்துக் கொண்டாயோ? இவர்களுக்குத்தான் மாலைக்கண்.   நிலவே… உனக்குக் குளிரே இல்லையா? வானப் போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றாயே…   நிலவு… எனக்குச் சொந்தக்காரி… அதனால்தான் அவளின் லீலைகளை அவ்வப்போது தெரிவிக்கின்றாள்.   நிலவே உன் அந்தபுரத்தில் சொர்க்கலோகமா வைத்திருக்கிறாய்… எல்லோரும் உன்னையே பாடுகிறார்களே?

பெருமை

  பொறுமை என்னை ஆட்சி செய்கின்றது. அதனால், நான் பெருமைப்படுகின்றேன்.

இந்நாட்டுப் பிரதிநிதிகள்

  நாங்கள்தான் இந்நாட்டுப் பிரதிநிதிகள். எனக்கென்று சொந்தமாய் இருப்பதோ ஒரு வேட்டி. அவள் என் மனைவிக்கென்று சொந்தமாய் இருப்பதும் ஒரு சேலை. நாங்கள் தினமும் வீடு கட்டுகின்றோம். வீட்டிற்கு எனது வேட்டி சுவரெழுப்பும். அவளது சேலை கூரையமைக்கும். இந்த எங்கள் வீட்டில் நுழைவு வாயில் சன்னல் நிலா முற்றம் அத்தனையும் உண்டு. இரவில் நாங்கள் பௌர்ணமிதான் விடிந்தால் எங்கள் வீடு பறிபோகும். நாங்கள்தான் இந்நாட்டுப் பிரதிநிதிகள்.

முகவரி இல்லாதவன்

காதலால் மாண்டவன் கரிநாளில் பிறந்தவன் காமத்தால் வாழ்பவன் சாபத்தால் அழிபவன் வீரத்தில் வாழ்பவன் ஏழையின் சொந்தக்காரன்.   அன்பால் சிக்குண்டவன் அழுகையின் பங்காளி முகவரி இல்லாதவன் முகாரிக்குப் பந்தக்காரன்.

சிலந்திக் கூடு

  அன்பு என்பது சிலந்திக் கூடு அது சிதைபடுவது நிரந்தரத்திற்கல்ல.

மறுதேர்வு

  அரியரில் பட்டம் பெற்றதால் நாங்கள் விடும் பட்டமும் அறைகுறையாய்ப் பறக்கிறது.

திருடன்

  ஆசை உள்ளவன் வீட்டில் திருடன் நுழைகின்றான். ஆசை இல்லாதவனிடம் திருடன் பழகுகின்றான்.

தேங்காய் அரசியல்

  இன்றைய அரசியல் ஒரு முழுத் தேங்காய். நான் அதை உடைத்தேன். ஆளுங்கட்சி என்றும் எதிர்க்கட்சி என்றும் தனித்தனியே அமர்ந்தது.   உடைக்கும்போது கொட்டிய நீர் இந்த மண்ணில்தான் விழுந்தது அதனால், சில சமயம் கூடுகின்றது உள்ளே பார்த்தேன் இரண்டிலும் வெண்மை நிறம். அதைச் சமைக்கலாமென்று துருவினேன். அதுவோ, நம்மையே துருவ ஆரம்பித்துவிட்டது.

சுதந்திரப் பெருச்சாலி

  என்றோ கிடைத்த சுதந்திரத்தை பெருச்சாலி ஒன்று விழுங்கிவிட்டது. அந்தப் பெருச்சாலிக்குப் பசியெடுக்கும் போதெல்லாம் பசிக்காரர்களை நசுக்குகிறது.   வெள்ளையன் தடியால்தான் அடித்தான் இவனோ அடிவயிற்றையே அடிக்கின்றான்.   காய் கறிகளுக்கு விலையேற்றம் இவனுக்குத் தினமொரு பெண்டாட்டி மாற்றம்.   பாய் விரிகளுக்குக் கொண்டாட்டம் ஆனால், தாய்மார்களுக்குத் திண்டாட்டம்.

எனது எழுதுகோல்

  போராட்டங்களைச் சந்தித்த இந்தப் பேனா பாராள வந்துவிட்டது.   ஏடெழுதிய இந்தப் பேனா ஏருழுத வந்துவிட்டது.   நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த இந்தப் பேனா சிவப்பில் மூழ்க வந்துவிட்டது. காகிதத்தில் ஊறிய இந்தப் பேனா சமுதாயச் சாக்கடையைச் சாட வந்துவிட்டது. இது பழைய பேனா. ஆனாலும் புதுமைப் பேனா.

உதையுங்கள் திறக்கப்படும்

  காலம் மாறவில்லை என்றால் எங்கள் மூச்சுக் காற்றும் தோட்டாக்களை உருக்கும்.   காரிகையின் கைகளில் மலர்ச்சரம் நீங்கி துப்பாக்கி இரவைகள் தொடுக்கும் காலம் வந்துவிட்டது.   ஈழத்தின் கற்பென்ன சிங்களனுக்குக் கற்கண்டா?   ஈழத்து மண்ணுக்கும் இதயம் இருப்பதால்தான் அவ்வப்போது பூமிக்குள்ளிருந்து எரிமலைகள் வெடிக்கின்றன.   ஈழத்துக் கண்ணகி உடைத்துச் சிதறிய சிலம்பு மணிகள்தான் விடுதலைப் புலிகள்.   குங்குமத்தை இழந்தவர்கள் குண்டுகளைச் சுடுகின்றார்கள்.   கண் கலங்கியவர்கள் கண்ணியத்தோடு நடக்கப் போகின்றார்கள்.   மண் வேண்டியவர்கள் நிச்சயம் பெறத்தான் போகின்றார்கள். அதனால், உடையுங்கள் கொடுக்கப்படும் உதையுங்கள் திறக்கப்படும்.

நாம்

  நாம் நெரிசலுக்குள் நெளிகின்ற புழுக்கள். அங்கே தரிசல்கள் விளையும்போது விரிசல்கள் நம்நிலத்தின் விளைபொருட்கள்.

உண்மையின் விலை

  இறைவா என்னை ஏன் படைத்தாய் எனக்கு அந்த ஆற்றலை ஏன் கொடுத்தாய். என்னிடம் பழகுபவர்கள் சகோதரத்துடன் பார்க்கின்றேன் அதனால் அவர்கள் வாழ்க்கையை உணர்கின்றேன் நல்லது நடக்குமென்று உணர்ந்த உண்மையைச் சொல்கின்றேன் அவர்களோ அல்லதையே நினைத்து கேட்டவன் சபிக்கிறான் என்று ஒதுக்குகிறார்கள். உண்மைக்கு விலை இதுதானா? இறைவா என்னை பிறக்க வைத்து உறங்கிவிட்டாயா?

நான்

  1.               மதி இழந்து           சில காலம்           கண்களுக்கு மயங்கினேன்.           அறிவிருந்தும்           இல்லாத           பெண்களுடன் பழகினேன்.           செருக்கிருந்தும்           அதைவிட்டு விலக்கினேன்.           மயக்கத்தால்           சில காலம் போக்கினேன்.           அந்த இயக்கத்தால்           நான்           இன்று விலகினேன்.     ...