நான்

 

1.              மதி இழந்து

          சில காலம்

          கண்களுக்கு மயங்கினேன்.

          அறிவிருந்தும்

          இல்லாத

          பெண்களுடன் பழகினேன்.

          செருக்கிருந்தும்

          அதைவிட்டு விலக்கினேன்.

          மயக்கத்தால்

          சில காலம் போக்கினேன்.

          அந்த இயக்கத்தால்

          நான்

          இன்று விலகினேன்.

          தனி மனிதன்

          என்றென்னை ஆக்கினேன்.

          இறைவா

          துணைக்கு

          உன்னை அழைக்கின்றேன்.

          நீ

          அருள் கூர்ந்து வருகின்றாய்.

          அருங்காட்சி பல

          காட்டுகின்றாய்.

          வரும்

          காலமதில் உணர்கின்றேன்.

          உண்மை நிலை

          எதுவென சுட்டுகின்றேன்.

          அருள் வாக்கு தருகின்றாய்

          அதன்படி செய்கின்றேன்

          எல்லோரும் என்னை

          பைத்தியம் என்கின்றார்

          சிலநேரம் அன்பினால்

          பாசமழை பொழிகின்றேன்

          பலநேரம் சிந்தித்து

          பாசவலை கட்டுகிறேன்

          என்றும்

          வலை உறுதியாக்க

          இரவுபகல் பிரார்த்திக்கிறேன்

          வலையில் மூடியை

          அளவோடு போடாததனாலே

          ஒழுங்காக இருந்தும்

          பயனற்றுப் போகிறது.

          கருத்தோடு வாழ்கின்ற

          காலமெல்லாம் கடந்து

          முதுமொழியில் வாழுகின்றேன்

          இன்றோ,

          அதனால் என்னை

          மதித்தாரெல்லாம் இகழுகின்றார்.

          அவர்கள்

          என்னை மிதித்தாலும் பரவாயில்லை

          மதியாது போனாலும் கவலையில்லை

          எங்கும் என்றும் வாழ்க

          என்றே வாழ்த்துகின்றேன்.

 

2.    நான்

          கண்ணீருக்கு அடிமையானவன்.

          அவள்

          அன்று உதிர்த்த கண்ணீர்

          என்னை

          சிறைக்குள் வைத்தது.

          அந்தக்

          கண்ணீர்த் துளிகளுக்கு

          எனது

          தூக்கத்தைப் பரிசளித்தேன்.

          அன்று நான்

          வாக்கியங்களாய்ப் பேசியதால்

          இன்று

          வார்த்தைகளால் பேசுகின்றேன்.

          அவளின்

          கோப தீபங்களுக்கு

          எனது பசியை

          விருந்தளிக்கின்றேன்.

          நோயில்

          படுத்த பொழுதெல்லாம்

          வாடியதில்லை.

          நோயில்லா பொழுதின்று

          வாடுகின்றேன்.

          நானில்லா இவ்வுலகில்

          நாயொன்றும் இருக்காது.

          ஏனென்றால்,

          அது யாவும்

          என்வீட்டு குணம் தானே.

 

3.              உயிரென்று

          ஒரு சொல்லில் அழைப்பார்.

          உறவென்று

          மறுகண்ணாய் நிற்பார்.

          உலகெல்லாம் மாயை.

          உயிர்தான்  மெய்யென்று

          பொய்யான பாசத்திற்கு

          மெய்யான என்மனம்

          அடிமையாகும்.

          சரியான பதிலடி

          கிடைக்கும்போது

          வரியான

          எனது கவிதைகளும்

          வாக்கியங்களாய் மாறும்.

          புரியாத புதருக்குள்

          தெரியாத

          வாசகத்தைத் தேடியதால்

          அறியாதவன்

          என்றென்னைத் தூற்றுகிறார்.

          தெரியாத இருளுக்குள்

          உலகத்தைக் காணுவதால்

          சிரியாத மனங்களை

          அறியாதவன்

          என்றென்னைப் போற்றுகிறார்.

          திரட்டுகின்றேன்

          விரியாத மனங்களை

          எழுப்புகின்றேன்

          சரியான உலகத்தைப்

          படைக்கின்றேன்.

4.              நான்

          பயன் கருதா வாழை.

          என்னை

          சிலர் மதிப்பார்

          சிலர் மிதிப்பார்

          பலர்

          புரியாது

          தவிப்பார்.

 

5.              இனிய தென்றலுக்கு

          நான் அடிமை.

          அதனால்,

          என்னைப்

          பழிவாங்கிவிட்டது.

 

6.              எல்லோரும்

          எனைவிட்டுப் போனாலும்

          எல்லோரும்

          எனைப்பழித்து நின்றாலும்

          எல்லோரும்

          எனையழிக்க நின்றாலும்

          என்னுயிர்

          எனைவிட்டுப் போகாது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா