வறுமை

 

முக்காலம் போற்றும் முத்தமிழே

முக்கடல் மோதும் முழுமுகமே

முச்சந்தியில் நிற்கும்

தென்குமரித் தாயே

எந்தன் தமிழ்த் தாயே, வணக்கம்.

 

வறுமையிது கொடுமையடா

வாய்க்கரிசி இல்லையடா

கொடுமையிது உண்மையடா

கொண்டாட்டங்கள் ஏதுக்கடா

 

வறுமை

இந்த நாட்டின் உரிமை

கொடுமை அதிகரிக்கும் போது.

 

வறுமை

எனும் வழக்குகள் யாவும்

பிளாட்பார

நீதிமன்றங்களில் தான்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

தாக்கல் செய்யப்பட்ட

வழக்குகளோ

பிளாட்பார

சுவரொட்டிகளால்தான்

தீர்க்கப்படுகின்றன.

 

மனிதனின்

நரம்புகளேன்

வரப்பைக் காட்டுகின்றன

வரப்பை மறைத்த

பயிர்களெல்லாம்

வதங்கிவிட்டதாலா?

 

வறுமை பழக்கமான போது

பழக்கங்கள்

புழகத்தை நாடுகின்றன.

 

அட்சய ரேகைகளையும்

கை ரேகைகளையும்

கண்ட நான்

வறுமை ரேகையைத் தானே

தினமும் தேடுகிறேன்.

 

வணக்கங்கள்

பெருகும்போது – வறுமை

குறையுமென்று

வாக்களிக்கின்றோம்

 

வாக்களித்த மறுநாளே

வணக்கங்கள்

கேள்விக் குறியாகின்றன.

 

சிலர்,

நிர்வாணமாக்கப்படும்போது தான்

வறுமையது

சேலை கட்டிக் கொள்கின்றது.

 

கால் செருப்போ

விடுதலை கேக்குது

கடைச் செருப்போ

அடைக்கலம் கேக்குது

என்மனம்

இரண்டுக்கும் நடுவே

மனப்போர் நடத்துது

இடையே நிற்பதோர்

வறுமைக் கோடன்றோ?

 

வறுமை

வளரும் குழந்தையன்றோ

பிறப்பு முதல் இறப்பு வரை

தொடர்ந்து வருவதோ

வறுமை தானே

 

தாய்ப்பாலை

இழந்த குழந்தையின்

நாக்குக்கு வறுமை

 

காதலி பிரிந்ததாலே

அவன், வாழ்க்கைக்கே

வந்தது வறுமை

 

பிள்ளைப்பேறு

இல்லாத பெற்றோர்

நெஞ்சில்

வளர்வதும் வறுமை.

 

(வேறு)

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

வறுமைப் போருக்கு

அச்சமென்ப தில்லையே

 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

காதலுக்கும் ஊடலுக்கும்

அச்சமென்ப தில்லையே

 

பந்தமில்லை பந்தமில்லை

பந்தமென்ப தில்லையே

பற்றற்ற நாட்டிலே

பந்தமென்ப தில்லையே

 

சொந்தமில்லை சொந்தமில்லை

சொந்தமென்ப தில்லையே

தனியொரு மனிதனுக்குச்

சொந்தமென்ப தில்லையே

 

மிச்சமில்லை மிச்சமில்லை

மிச்சமென்ப தில்லையே

மீசையில்பட்ட கூழுகூட

மிச்சமென்ப தில்லையே

 

எச்சமில்லை எச்சமில்லை

எச்சமென்ப தில்லையே

எடுத்துவைச்ச அஞ்சுபைசா

எச்சமென்ப தில்லையே

 

பஞ்சமில்லை பஞ்சமில்லை

பஞ்சமென்ப தில்லையே

வளரும் வறுமைக்குப்

பஞ்சமென்ப தில்லையே

 

வறுமையில்லை வறுமையில்லை

வறுமையென்ப தில்லையே

வறண்டுவிட்ட நாக்குக்கு

வறுமையென்ப தில்லையே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா