மனைவி
கல்லூரிச் சென்று
கற்றவன் என்பதால்
கொள்கையில்
நிலையில்லா என்னை
கணவனென்று
மாலைபோட்டே
மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொண்டாய்.
உனக்கு
மனைவி என்ற
சொந்தத்தை
மாங்கல்யத்தில்
அளித்துவிட்டு
நான்
கோவலனாய் இருப்பினும்
மாதவியாய் இல்லாமல்
சாந்தமாய் இருக்கின்றாய்.
என் மனம் கருங்கடல்
ஆனாலும்
உன் எண்ணம் அதில்வரும்
அலைபோல
முட்டி மோதுவதேன்
– என் மனம்
நிறம் மாறுமென்று,
சாந்தமாய் அலைகின்றாய்.
உன்னைக் காதல்
செய்து
மணம் கொண்ட –
உன்
காதலன் அல்ல.
கட்டுப் பாட்டுக்கே
அடிமையாகி என்
பரந்த எண்ணங்களுக்குப்
பரப்பைக் குறுக்கிச்
சிறகொடித்த பறவையாக்கிக்
கூட்டினிலே சிறைவைத்து
கூட்டி வந்து
கூட வைத்தால்
கூடவா தோன்றும்.
அதனால்
அமைதியில்லாமல்
அலைகின்றேன்
அலைகடலை நோக்குகின்றேன்.
நிலையில்லா என்மனம்
போல
நிறமில்லாத கடல்
நிறம் மாறித்
தோன்றுகின்றது.
என்,
இதயம் துடிப்பது
அதிகம் என்பதால்
ஆடிவரும் தென்றல்
பின்னோக்கிச்
சென்று
அலையினை அழிக்கிறது.
இருப்பினும்,
உன் வாசம் என்ற
தனித்தென்றல்
– என்
தனிமைக்கு இதமாய்
தென்றலை மட்டும்
எனக்களித்து
சாந்தமாய் நிற்கின்றாய்?
ஏன்?
உனக்கு நான்
கணவன் என்ற
பாவத்திற்காகக்
கண்ணகியாய் நீ
– என்னைக்
கருத்தோடு காக்கின்றாய்.
கணவன் என்ற சொல்லுக்கு
அருகதியில்லாமல்
கனவினிலே உன்னை
மாலை போட்டு மனைவியென்று
ஏற்றுக் கொண்டேன்.
இருந்தாலும்,
என் மனம் உன்னோடு
வர
முடியவில்லை
– அது
சிந்தனை என்னும்
செம்பகத்தைக்
காதல் செய்து
மனதினிலே
மணமும் செய்து
நாட்கள் பல ஆனதால்
– என்
ஒவ்வொரு நாடித்
துடிப்பிலும்
கீதத்தோடே நிற்கின்றாய்.
அதனால் நான்
இருதலைக் கொள்ளியாய்
இதயம் இல்லாமல்
இருக்கின்றேன்.
அப்படி இருந்தும்
சாந்தமாய் இருக்கின்றாய்
எந்தன் மனம் உருகுமென்று.
என்,
காதல் மனைவி
கருத்தில் நிற்க
எண்ணமெல்லாம்
அவள் பெயரைக்
கவிதை என்னும்
இயற்பெயரை
இயற்கையோடு
சேர்த்தே எழுத
– இவன்
துடிப்போடு நிற்க
குறுக்கே வந்து
நின்றாய் நீ
– என்
சந்தங்களுக்குத்
துடிப்புக் கொடுத்து
உயிர்க் கொடுத்தால்
மனைவி என்ற
பெயருக்கு மறுப்பில்லை
வெறுப்பில்லை
– நான்
விரும்புவது
உன்னிடம் இருந்தால்?
Comments
Post a Comment