காதல் கவிதைகள்

 

முருங்கை மரம்

ஈரமென்று

ஊஞ்சல் கட்டினேன்

          உலர்ந்ததால்

          கிளை முறிந்தது

என் வாழ்வும்

          சரிந்தது.

 

பெண்ணுக்கு

வேலியென்று

தாலி கட்டினேன்.

அவளோ

இன்று

தாலியையே

முள்ளாக்கிக் குத்துகின்றாள்.

 

நீ

மை இட்டதால்

மையல் கொண்டேன்.

மொழி

வந்ததால்

மெய் மறந்தேன்.

கை

பட்டதால்

கை பிடித்தேன்.

பின்,

கழி

என்றதால்

எனை இழந்தேன்.

 

நான்

பொருளை மதிப்பதில்லை

உயிரையும் மதிப்பதில்லை

ஆனால்,

அவளுக்கு முன்

நான்

அறக்கவும் துணியவில்லை

காரணம்?

என் உயிரே,

அவளன்றோ.

 

கனவில்

படிக்கும் போதும்

அவள் நினைவே

நித்தமும் வருகிறது.

 

நான் எப்பொழுதும்

சோகமே

எழுதுவதால்

என் எழுதுகோல்

திறக்குமுன்னே

அழுகின்றது.

 

தமிழைப் பாடு என்றால்

மனமோ

அவளைப் பாடுகிறது.

ஏன்?

நான் கண்ட தமிழ்

அவளோ.

 

அன்று,

அவள் கண்ணத்தில்

முத்தமிட்டேன்.

இன்று,

என் எண்ணத்தில்

சத்தமிட்டாள்.

 

விடைத்தாளை

எழுதும் போதும்

அவள் பெயரைச்

சுழிக்கின்றேன்

அவளோ

என்னையே

சுழித்துவிட்டாள்.

 

அழகாய்

முல்லை

படர்ந்து வந்தது

அலையாய்ப்

புயல்

தொடர்ந்து வந்ததால்

பிணையா திருந்த

முல்லைக் கொடியும்

பிரிந்து போனது.

பிணைந்த கொம்போ

இன்று, பிரிவால் வாடுது.

 

சன்னலைத் திறந்ததும்

பன்பலையானது – பின்

அண்ணலைப் பார்த்ததும்

எண்ணலை வளர்ந்தது – பின்

கண்ணலை மூடியதும்

என்னிலை போனது.

 

அவன்

பன்னீரில் குளித்ததால்

நான்

கண்ணீரைக் குடித்தேன்.

 

இரவு வேளை

இன்னிசைக் காற்று

இசையினை எழுப்பி

இராகக் கீதம் பாடும்

அதில்,

அவள் கீதம் சேரும்.

பன்னிரு நேரம்

சிந்தையில் ஒருவள்

பங்குனியாக

எங்கும் இருந்தாள்.

வானை நோக்கின்

நிலவினைக் காணா

அவள்

முகத்தைக் காண்பேன்

பனிதரும் சுகமே

அவள் இதழ் தரும்.

சுகமாய் இருப்பேன்

தென்றல் என்னைத்

தீண்டும் போதும்

அவளின்

பெருமூச்சை உணர்வேன்.

காற்றில் பட்டு

சலசலக்கும் அவளின் தாவணி

என் பாட்டுக்குச்

சுருதி சேர்க்கும்.

கண்களிரண்டும்

மூடி திறக்கும் போதுதான்

இரவும் பகலும் காண்கின்றேன்.

 

அவள் வீட்டுத்

திண்ணை கூட

கல்யாணி பாடுகின்றது.

ஆனால், அவள் மட்டும்

எப்பொழுதும்

புகாரிக்கே

சுரம்  தருகின்றாள்.

 

நான், வீணையில்

சுரம் பிடித்ததில்லை.

அவள், சிரிப்பில்.

 

எனக்கு

அவள் கவிதையாகிறாள்.

அந்தக் கவிதைக்கு

நான்

எழுதுகோலாகின்றேன்.

 

புயல் வந்தது

உரிமை போனது – பின்

பொருளும் போனது.

ஆனால்,

அவளின்

நினைவு மட்டும் போகவே இல்லை.

 

என் கண்ணீரில்

அவள் குளிக்கின்றாள்.

அவள்

குளிப்பதற்கென்றே

கண்ணீர் விடுகின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா