மாற்றுவோம் கி.பி. … கி.மு… .
காதலியே
உன் மேனியெங்கும்
என் உதடுகளால்
நடக்கப் போகிறேனடி
ஆம், நான் அரண்மனைகளைவிட
அந்தப்புரங்களையே
அதிகம் நேசிக்கின்றேன்.
ஈரடித் திருக்குறளைக்
கூட
மனப்பாடம் செய்ய
முடியாத என்னால்
இன்று மட்டும்
எப்படி
உன் நீண்ட கடிதங்களை…
நீ நடத்தும் பருவப்
பாடங்களில்
உன்னையே மனப்பாடம்
செய்கின்றேன்
பிள்ளையார் சுழிக்குப்
பதிலாக
உன் பெயரைத் தான்
எழுதுகின்றேன்.
நீந்த மறந்த கயல்களெல்லாம்
நீச்சலை
உன் கண்ணசைவில்
தானே
கற்றுக் கொள்கின்றன.
மயில் கூட்டங்கள்
உன் கூந்தல் முகில்
கண்டு
தோகைகளை விரிக்கின்றன.
தொலைபேசியில்
கூட
குயில் கூவுமா?
என்ற வியப்பு எனக்கு
பிறகுதான் புரிந்தது
நீ பேசுகிறாய்
என்று
ஏனோ உன் மகுடிச்
சிரிப்பின் முன்னால்
என் நரம்பு நாகங்கள்
நாட்டியமாடுகின்றன.
உன் கையணைப்புச்
சுகம்பெறும்
புத்தகங்களில்
ஒன்றாக
என் கவிதைப் புத்தகமும்
இருக்கட்டும்.
நீ கனவுகள் காண்பதற்காக
என் கவிதைப் புத்தகங்களையே
தலையணையாக்கிக்
கொள்.
ஆமாம், மது நதிகள்
உன் உதடுகளில்
உற்பத்தியாகிறதென்று
அந்தக் காவல்
துறையினருக்குத் தெரியாதோ?
எனது எழுத்து
விழுதுகள்
இறங்கி வருவதே – நீ
ஊஞ்சலாடத் தானே.
நான் பர்ஸ் வைத்திருப்பதும்
காசு பணத்துக்காக
அல்ல
உன் புகைப்படத்துக்காக.
அடிக்கடி நீ பாதையில்
கர்ச்சீப்பை தவறவிடுவதுபோல்
என்னையும் தவறவிட்டுவிடாதே.
அட்சரேகை முதல்
மத்திய ரேகை வரை
நான் தேடிக்கொண்டிருப்பது
உன் கை ரேகையைத்
தான்.
நாணத்தால் நீ
முந்தானையை
கடிக்கும்போது
பலர்
காவியுடைகளைத்
துறக்கிறார்களாம்.
சமுதாயக் காதல்
சதுரங்க விளையாட்டில்
நீ எனக்கு விழுந்த
தாயம்.
வீட்டுச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கும்
அழகு நிலவே
எனக்காக சற்று
உன்
இமைக் கதவுகளை
திறந்து வைக்கக் கூடாதா
இல்லையெனில் இதோ
நான்
எழுத்து ஏணியில்
ஏறி வருகிறேன்.
என் ஆசைப் பறவைகள்
உன் இதய வேடந்தாங்கலுக்கு
வசந்தத்தில் வந்து
கோடையில் திரும்பிவிடும்
வெளிநாட்டு பறவையல்ல
உன்னுடைனேயே குடியிருக்கும்
தேசியப் பறவை.
அதனால்தான் என் இதயச் சுவரெங்கும்
உன் புகைப்படங்களையே
பேனா ஆணி அடித்து
மாட்டியிருக்கின்றேன்.
நான் உன் இதயக்
கோட்டையை
அடையக் கூடாதென்பதற்காகத்
தான்
அகழிகளில் எதிர்ப்பு
முதலைகளை
வளர்க்கின்றார்களாம்
– பாவம்,
அவர்களுக்கெங்கே
புரியப்போகிறது
எனக்கு முதலைகளே
ஓடங்களென்று.
சமுதாயத்தின் சாதிக் காயங்களுக்கு
நமது காதல் கடிதங்களே
கந்தக மருந்துகளை
மடிக்கட்டும்.
சாதிச் சமாதிகட்டி
அதையே மணமேடை
யாக்குவோம்.
பெற்றோர்கள் போடும்
தடைக் கோடுகளை
திருமணக் கோலமாக்குவோம்.
உலகம் நம்மீது
எறியும்
வசை வார்த்தைகளைக்
கோர்த்தே
அழைப்பிதழ்கள்
அச்சடிப்போம்.
பணத்தோரணங் கட்டி
பாடும் ஒலிப்
பெருக்கிகளின்
பொய்க்கச்சேரி தேவையில்லை
ஓசையின்றி வாழ்த்தும்
ஏழைகளின் புன்னகைகள்
போதும்.
கி.மு. – கி.பி.
களை
கிழித்தெரிந்துவிட்டு
இனிநம்,
காதலுக்கு முன்
காதலுக்குப் பின்
என்று
புதிய சரித்திரக்
குறிப்புகளை
குறிப்போம் வா,
காதலியே.
Comments
Post a Comment