கதிரவன்
இருள் விலகக் கதிரெழுந்து
இமை திறந்து நோக்கும் – நாளை
இமை மூடியே கனவினிலே
கண்ட அந்த நாள்
இன்று,
நீல வண்ண மேகன்
தன் மேனியினிலே
பட்டாடை உடுத்தியதாலே
கண்ணாடியாய்
மின்னும் தன்னுடம்பால்
தரணிக்கு இன்று
ஒளி தந்தான்.
கதிரெழுந்து வந்த
கன்னிய வேளையில்
சூன்யங்கள் பல
தூரவே ஓடியது.
உழவர் கவலை
உழைப்பில் தீர
உறுதியுடன் உற்சாகத்தோடு…
அவனுக்கு
ஊக்க மூட்டவே
ஊன்றுகோலாய்
உதவி செய்த
நாள் இன்று
பொங்கல் என்னும் பொன்னாள்.
தமிழரின் இவ்விழா
தரணிக்கே தெரிந்த
தங்கத் தமிழ் விழா
பொங்கல் என்னும் இவ்விழா.
இவ்விழா
பானுவின் வரவினிலே
வரங்களைக் கேட்டு நிற்கும்
வரன்கள் இங்கே
வாசலிலே பொங்கலிட்டு
பொங்கி வழியும் பொங்கலிலே
தன்னுள்ளச் சிரிப்பைச் சேர்த்தே
மகிழும் நாளின்று.
ஆம்,
இன்று தைமகள் வரவிற்குக்
கைச் சலங்கையிட்டோர்
காலை வேளையில்
கூட்டிப் பெருக்கி கோலமிட்டே
கோலாகலமுடன் வரவேற்பார்
உந்தன் எழில் உருவம்
பூமிதன்னில் பட்டு பூக்கும் மலருக்கு
புத்துணர்ச்சியூட்டும் நேரம்
தங்கள் வாழ்வும் – அதில்
பாதியாகுமென்றே
பக்தியோடு செய்திடுவார்.
சின்னக் குழந்தையென்ன
உன் பளபளக்கும் மேனியைக் கண்டு
தன் முத்துப்பல் தெரியவே
முந்நூறு முறை சிரித்திடும்.
சிரிப்பிலே சிந்திடும் முத்திற்கு
அதை அள்ளிக்கவே
முகத்தருகே நிற்கும்
அவள் தாய் பூரிப்போடு நிற்பாள்
பூமகள் உன் வரவிலே.
இன்று,
இந்த உன் வரவு
நல்வரவாக
நாங்கள் ஏற்க
தாங்கள் – எங்கள்
நல்வரவினை
பன்வரவாக ஏற்றே
என் வரவுக்குத்
தன் வசந்தத்தை
எங்களுக்காக
சிறிது நேரம்
சீற்றமில்லாமல் – எங்கள்
முடிவில்லா எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்தே
முனைப்போடு
எங்களை வழி நடத்த
வந்த நாள் வரவிலே
வாகையோடே கேட்கிறேன்
உந்தன் மைந்தனிவன்.
இவன்,
சிரிப்பில் வாழ உன்
அருளை நாடியே இருக்கின்றேன்.
Comments
Post a Comment