பெருமழையே… உன்னைத்தான்
நிலவே
உன் குளிர்ச்சியினைத்
தாங்காமல் தான்
மேகமது பனிக்கட்டியானதோ?
பகலோனின் கதிரனைத்தும்
மேகத்திற்கே சொந்தமானதால்
– அது
உருகி மழையாகின்றதோ?
வானம் பார்த்த
உழவர்க்கு
வசந்தம் வந்தது
வாடிய பயிர்களுக்கு
இன்று
வாழ்வே போனது.
ஆம், வந்தது பெருமழை
அழிந்தது களஞ்சியங்களே.
ஏ, மழையே
உன் ருத்ர தாண்டவத்தை
உழவர்கள் மீதா
காட்டவேண்டும்
உன் வருகையால்
தான்
பூமித்தாய் குளித்துச்
சீறி
சிங்காரித்து
பூ முடித்தாலோ?
கடலிலே வீடுகட்டிக்
குடியிருப்பதாக
கனவு கண்டுக்
கொண்டிருந்தேன்.
ஆம், என் வீட்டையே
கப்பலாக்கி
வீதியையே கடலாக்கி
கனவில் இருந்த
எனக்குத்
திருப்தியளித்தாய்
உன்வரவினிலே.
கப்பலிலே பயணம்
செய்ய
கனவிலாவது முடியுமா
என்ற ஏக்கம் எனக்கு
இன்று, பல்லவனே
கப்பலாகு மென்று
ஒப்புக்கும் நினைக்கவே
முடியலே.
கடல் நடுவே மரம்
வளர்க்க
கனவிலே ஆராய்ச்சி செய்தேன்
இன்று, அது பலித்துவிட்டது.
ஏ, மழையே
உனக்கு என்ன திருமணமா?
ஒவ்வொதரு துளி
மழையையும்
அச்சு இயந்திரத்திலேற்றி
அழைப்பிதழ் தயாரித்தாயே.
அழைப்பிதழை மட்டும்
அச்சிட்டு
அழைக்காமலே
திருமணத்தை முடித்துவிட்டாயே
காலம் தவறி வருவதாலே
வரவேற்பு இருக்காது
என்று நினைத்து
விட்டாயோ?
உன் திருமணத்திற்குத்
தவளைகளின்
இன்னிசைக் கச்சேரியை
வைத்து விட்டாயே
தாலி கட்டுவதற்கு
நான்கு நாட்களா
தேவைப்பட்டது
பசியால் வாட்டிவிட்டாயே
எங்களை
கடலிலே முத்தெடுத்து
கரை சேர்க்கலாம்
கரையே இன்று கடலானதால்
கலங்கரை விளக்கு
தேவைப்படாமல்
போய்விட்டது
பல்லிசை மன்னனின்
குரல்கேட்டு
பல ஆண்டு ஆனதால்
பல்லவியெல்லாம்
மறந்தே போனது.
இன்னிசை இளவல்
இளையராஜா இன்று
இனிக்க வைக்கிறார்
என்றால்
இப்பொழுதுதான்
தெரிந்தது
இளையராஜாவே
தவளையின் சீடனென்று.
மாடிகளில் வாழமாட்டோமா
என்ற
பாட்டாளி வர்க்கம்
இன்று பல
மாடிப் படிகளை
அலங்கரிக்கின்றனர்.
தெரு ஓடையிலே
காகிதக் கப்பலைச்
செலுத்தியே மகிழ்ந்த நான்
இன்று, கூரை வீடுகளெல்லாம்
காகிதக் கப்பலானதால்
அழுது புலம்புகிறேன்.
ஏ, மழையே
காலம் தவறி வந்தாலும்
இரு பதினொராண்டு
சாதனையை
இரண்டே நாழிகையில்
முறியடித்தாயே.
சாதனைகளை முறியடித்த
கவாஸ்கருக்கே
கிடைக்காத
வரவேற்வு உனக்கு
இங்கே.
நீயென்ன குருடனா
எங்கள் மதில்
சுவர்களில்
முட்டிமோதி செல்கின்றாயே.
இல்லை,
பாவப்பட்ட இடங்களையெல்லாம்
கழுவி விட்டுச்
செல்கின்றாயோ.
செய்யும் பாவங்களை
யெல்லாம்
மூட்டை மூட்டையாய்
அடுக்கியே வைத்துள்ளோம்.
நெல் மூட்டைகளை
அடுக்க முடியாதவர்கள்
இன்று
அழுக்கு மூட்டைகளைப்
பதுக்கி வைக்கின்றார்கள்.
ஏ, பெருமழையே
உன் வரவிலே தான்
அழுக்கு மூட்டைகளெல்லாம்
டாட்டா காட்டுகின்றனவோ
ஏ, பெருமழையே
நீ
பருவம் தவறி வந்தாலும்
வருடம் மட்டும்
தவறவிடாதே
ஏனென்றால்,
பதுக்கி வைக்கும்
அழுக்கு மூட்டைகள்
சுரங்கப் பாதையைத்
தேடிக்கொள்ளும்.
Comments
Post a Comment