கடல் நடுவே ஓர் கண்ணீர்த்துளி
காதலியே
உன்னுள்ளக் கடலினிலே
என்னோடம்
மூழ்கிக் கிடப்பதேன்?
காதலின் தோல்வியால்
விட்ட
கண்ணீர்த் துளிகள்
ஓடத்தில் வீழ்ந்ததோ
அதனால், ஓடம்
மூழ்கியதோ.
இன்பக் கடல் நடுவே
கனவோடு பயணம்
செய்தேன்
கணத்தில் மாற்றிவிட்டாயே
துன்பக் கடலில்
என்னை
தூய்மையாய்
இறக்கிவிட்டு
விட்டாயே
துயரத்தையே எனக்கு
உறுதியாக்கிவிட்டு
இமயத்திற்குச்
சென்றுவிட்டாயோ
பொங்கி வரும்
கடலுக்கு
ஒரு சொட்டு கண்ணீர்த்துளி
ஆறுதல் சொல்லுகிறதாம்.
தூற்றாமையை என்
நெஞ்சில்
ஊற்றெடுக்கச்
செய்துவிட்டு
தாங்காமல் செல்கின்றாயே
என் ஆசைக் கடலினிலே
உன்னை வித்தாக்கி
விதவிதமாய் பயிரிட்டேன்
விளைச்சலின் காலத்திலே
காளை இவன் வாழ்விலே
காலைவாரி விட்டு
விட்டாயே
உன் வளர்ச்சிக்கே
என் கண்ணீர்த்
துளிகளை
உரமாக்கினேன்
– இன்று
வற்றிப் போனதால்
ஒரு சொட்டு கண்ணீர்த்
துளிக்கும்
சத்தியாகிரகம்
செய்கின்றேன்.
என் கண்களும்
காந்திய வாதிகளாகிவிட்டனவோ?
உன் பாசக் கடலில்
என்னோடம்
கண்ணீர் விட்டுச்
சென்றது.
ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி
அதிகம் விட்டதாலே
பாழ்பட்டுப் போய்விட்டது.
நான்விடும் கண்ணீர்த்
துளியில்
குளிக்கும் இனியவளே
குளிரால் வாடுகின்றேன்
குளிர்ந்து அழைத்திடுவாயோ
தோல்வியைக் கண்டேனில்லை
இன்று மட்டும்
கண்ணீர் விட்டேன்
உன்னைக் காதல்
செய்ததினால்.
முக்கனி சாறு
பிழிந்து
முச்சாரம் குடித்துவிட்டு
முழுமையாய் முந்நூறு
நாள்
சிறையிலிருந்து
முத்தாய் பிறந்தவள்
– நீ
என்பதற்காக
முத்தாகி விட்டாயே
ஒரு சொட்டு கண்ணீருக்கு
என்னைச் சொத்தமாக்கி
விட்டாயே.
காதலியே
உன்னுள்ளக் கடலினிலே
என்னோடம்
ஒரு சொட்டு கண்ணீரில்
முத்தெடுக்கச்
செல்கின்றதே.
Comments
Post a Comment