வண்ணக் கிளியே
வறண்ட என்னிதயத்திற்கு
வரப்பிரசாதம்
கொடுத்துவிட்டு
வாராமல் போவதேனோ?
வண்ணக் கிளியே.
என்னிதயத்தைச்
சோலையாக்கிப்
பூத்துக் குலுங்கும்
பொழுதினிலே
பூதக்காற்று வீசுவதேனோ?
வண்ணக் கிளியே.
நீ சந்திரனின்
மகளென்றா
சந்திப்பவர்களை
எல்லாம் மயக்குகின்றாய்?
உனக்கிது அழகோ?
வண்ணக் கிளியே.
அரைகுறையாய் நீ
பார்க்கும் போதே
ஆறறிவை இழக்கின்றேன்.
நாயாய் அலைகின்றேன்
உனக்கிது அழகோ
வண்ணக் கிளியே.
மேடையில் நீ பேசும்பொழுது
பேடையாய் ஆகின்றேன்
– என்
வாடை வீசவில்லையோ?
வண்ணக் கிளியே.
நோயொன்று வந்ததாலே
நேரான முதுகு
கூட
கேள்விக் குறியானது
வண்ணக் கிளியே
உனைக் கண்டவுன்
ஏனோ
வியப்புக் குறியானது.
என்னை நீ பார்க்கும்
பொழுது
எண்ணம் ஏதும்
இல்லை எனக்கு
வண்ணக் கிளியே
நான் உனைப் பார்த்ததுமேனோ?
உலகமே நீயென்பதேன்?
வண்ணக் கிளியே.
அரைக்கண் பார்வையிலே
போதை தருகின்றாயே
வண்ணக் கிளியே
– நீ
போதையின் இருப்பிடமோ?
உன்னிதழோரக் கிண்ணத்தில்
மது அருந்தத்தான்
– நான்
பட்டைக் கடையும்
மறந்துவிட்டேன்
வண்ணக் கிளியே.
நீ குளிப்பதற்கு
என் கண்களையேன்
பயன்படுத்துகின்றாய்
வண்ணக் கிளியே
கரம்பு நிலமாகட்டும்
பயிர் செய்யலாமென்றா?
உன்னையே நினைத்திருக்கும்
மன்னன் நான் இருக்கும்
பொழுது
வானத்தை நீ பார்ப்பதேனோ?
வண்ணக் கிளியே.
நம் கல்யாணத்திற்கு
நாள் பார்க்கச்
சொல்கின்றாயோ
இல்லை, என் வாழ்வுக்கு
நாடி பார்க்கச்
சொல்கின்றாயோ?
Comments
Post a Comment