அலைமகளே…
வங்கக் கடலில்
வளைந்து வரும்
அலைமகளே
எங்கள் வங்கிகளில்
சேமிப்பே இல்லாததினால்
சோர்வோடு திரும்புகின்றாயோ?
அலை நடுவே வலைவீசி
மீன் பிடிக்கும்
தொழிலாளியை
நீயேன் சில சமயம்
வலைவீசிப் பார்க்கின்றாய்.
எங்கள் கண்ணீரால்
உன் வெப்பம் அதிகமானதால்
கொந்தளிக்கின்றாயோ?
எங்கள் வாழ்க்கைக்
கனவுகளை
உனக்கு அர்ச்சனைப்
பூவாக்கி
மணல்தாலி கட்டினோம்.
உன் கோபப் பொங்கலில்
சிதறிய சிலேடைகள்
இன்று,
கதறியழுகின்றன.
வங்கக் கடலில்
வளைந்து வரும்
அலைமகளே
கலைமகளே, தமிழ்மகளே
நீயென்று, விலைமகளானாய்?
ஓ… தமிழ்மகன்
துவண்ட நேரம்
சுரண்ட வந்த வெள்ளையன்
உன் தோலினையே
தோழமையாக்கி
மெய்ப்பொருள்களை
மெய்ப்பவனிடம்
கொடுத்து விட்டு
உல்லாசமாய் இருந்துவிட்டாய்.
இன்று, உன் தோலினைச்
சுமக்க
உனக்கே நிலையில்லை
அந்தக் கோபத்தில்
தானோ
உன் வெறியாட்டம்
எங்களைப் பகடைக்
காயாக்கி
அவ்வப்பொழுது
சூதாட துணிந்துவிட்டாய்.
எங்களின் திருமகளே
வெள்ளையனின் விலைமகளே
தமிழனின் கலைமகளே
கவியின் எதில்மகளே
காப்பியத்தின்
திருவுருவே
சொல்லில்லா வங்கக்
கடலே
உன்னை நான்
என்னென்று அழைப்பது
என்னென்று சொல்வது
அலைமகளே
நான் உன்னைக்
காதலிக்கின்றேன்
அலைக்கழித்து
விட்டுவிடாதே.
பாதை சாரிகளில்
தான்
பாத சாரர்கள்
பல
சாரிகளைப்
பதம் பார்க்கின்றார்கள்.
அலையருகே நடந்து
பாதம் கழுவிக்
கொண்டு
மன்னிப்பு கேட்கின்றனர்.
நானோ,
உன் கலை அலையை
நெஞ்சலையாக்கிக்
கொஞ்சமும் நிம்மதியில்லாமல்
கெஞ்சுகின்றேன்.
அலைமகளே
நான் உன்னை காதலிக்கின்றேன்
அலைக்கழித்து
விட்டுவிடாதே.
Comments
Post a Comment