காதல் வீணை

 

1.              நீ தந்த போதனையில்

          வாழ்ந்ததால்

          இன்று

          நீ

          தருகின்றாய் சோதனை.

          அதுவே

          எனக்கு வேதனை

          இருப்பினும்

          அதுதான்

          என்

          வாழ்க்கையில் சாதனை.


2.              நமக்குள்

          ஆயிரம்

          கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்

          அதில்

          அன்னியர் வந்து

          புகல்வதென்ன நீதி?

 

3.              உன்னை அடைந்தால்

          என் உயிர் போகுமாம்.

          புரியாதவர்கள்

          பிதற்றுகிறார்கள்.

          உன்னைப் பிரிந்தபின்

          என் உயிர் இருக்குமென்று

          கனவு

          காணுகிறார்கள்.

 

4.              நான்

          மல்லியை விரும்பவில்லை

          முல்லையையும் விரும்பவில்லை

          குறிஞ்சியைத் தானே விரும்புகின்றேன்.

          நீயோ

          குறிஞ்சியாயும்

          நெருஞ்சியாகின்றாயே.

 

5.              குறிஞ்சிக்கு

          நீ

          தந்தாய் மொட்டு.

          என்

          வாழ்க்கைக்குத்

          தந்தாய் குட்டு.

 

6.              நான்

          காதலிக்கின்றேன்.

          உன்னைப்

          பிரிந்தபின்

          என்

          உயிர்த் தமிழை.

 

7.              வாடுகிறேன்

          வாடிய போதெல்லாம்

          அவளைத் தேடுகிறேன்.

          மீண்டும்

          வாடுகிறேன்

          வாடிக்கொண்டே இருக்கிறேன்.

 

8.              உன் பெயருக்கு

          நான்

          முதலெழுத்தைத் தந்ததால்

          என் பெயரில்

          முதலேழுத்தை இழந்தேன்.

          இன்றோ

          நீ

          மாறிவிட்டாய்.

          உன் பெயருக்கு

          வேறொரு முதலெழுத்தை

          தேர்ந்துக் கொண்டாய்

          நானோ

          முதலெழுத்தை இழந்து

          தனி மரமாய் ஆனேன்.

          இனி, நான்

          யாருக்காக வாழவேண்டும்?

          என் பெயரில்

          உயிரெழுத்து போனபின்

          மெய்யெழுத்திற்கு என்ன வேலை?

 

9.              என் நினைவுகள்

          சுகம் காணுகின்றன.

          அதன்

          கனவுகளால்

          வாழ்க்கை நடத்துகின்றேன்.

 

10.         அன்று நாங்கள்

          ஜோடிப் புறா

          இன்று நாங்கள்

          கேள்விப் புறா

          அவள்,

          மாடப்புறாவானதால்

          நான்

          கோயில் புறாவானேன்.

 

11.         என்

          விழிநீர் கண்டு

          பிணி நீர்

          பயந்து

          ஓடுகிறது.

          என்

          எண்ணங்களால்

          நீ

          நீர்

          பாய்ச்சுவாய்யென்று.

 

12.         என்னைப் பார்த்தால்

          ஊமையன் கூட

          பேச முயல்வான்.

          நீ

          பேசாதிருப்பது ஏன்?

 

13.         இன்று

          என் உயிர்

          உன்

          ஒளிச்சேர்க்கையினால்

          வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.

 

14.         நான்

          தாகத்திற்கு

          நீர் கேட்டேன்.

          நீயோ

          குளிப்பதற்கே

          நீர் தந்தாய்.

          எதற்கு

          என் சடலத்தைக் குளிப்பாட்ட.

 

15.         நான்

          ஏமாற்றங்களின்

          சேமிப்புக் கிடங்கு

          என்பதால்தானே

          நீயும்

          அப்படிச் செய்தாய்.

 

16.         கோயில் யானை

          யாரையும் வஞ்சிக்காது.

          ஏனென்றால்,

          இறைவனுக்கு ஆட்பட்டது.

          நானும்

          யாரையும் வஞ்சிக்க மாட்டேன்.

          ஏனென்றால்,

          உன் பாசக்கயிற்றால்

          கட்டப்பட்டவன்.

 

17.         மலர்

          வாடிய போதெல்லாம்

          என் மனம்

          வாடியதில்லை.

          நீ

          நிறம்

          மாறியதும்தான்

          வாடுகின்றது.

 

18.         நான்

          உணர்ச்சியில்

          வாழ்ந்ததால்

          இன்று

          கற்பனையில்

          வாழ்கின்றேன்.

 

19.         என் எடையளவே

          அவள் இடையாளவானது.

          அவன் விதி எதுவோ

          அதுவே

          என் வழியானது.

          அவள் மனம்

          பல வண்ணம்.

          என் மனம்

          என்றும் ஒன்றே.

          கல்மனம் யாவும்

          எந்நிலை கண்டு மாறும்.

          மாலை தென்றலும்

          அவள் மூச்சுபட்டால்

          புயலென மாறும்.

          நான் பார்த்த முல்லை

          கொடியில்

          பாதுகாப்பாய் இருந்தது.

          இன்றோ,

          நதியில் சிக்கி

          கலை இழந்து நிற்கின்றது.

          என் காலைச் சுற்றிய முல்லை

          வெப்பத்தைக் கேட்டது

          வெம்மைக்கு இதமாய்

          காலடியில் இருந்தது.

          நாலடி

          நான்

          நகர்ந்து செல்லும்போது

          பதிலடி

          தருவதாய் எண்ணி

          அவள் வாழ்க்கையை

          அழித்துக் கொள்கின்றாள்.

          பல சாலையில்

          நடந்ததை மறக்கின்றாள்.

          பலசாலியை இழக்கின்றாள்.

          அது,

          என் பிரிவால் அல்ல

          அவளின் மன அலைப்பால்.

          அதனால்,

          அவள் எடையோ

          என் இடையானது.

 

20.         நானொரு

                  இரகசியப் பூங்கா.

                  இந்த

                  இரகசியப் பூங்காவில்

                  இரகசியமாய்

                  முல்லைப் பூக்கள்

                  பூக்கும் போது

                  நீ

                  எல்லையைக் கடந்தாய்

                  அதனால்,

                  நான்

                  தில்லையை அடைந்தேன்.

                  நீயோ

                  தன்மையை இழந்து

                  வெம்மையைக் கேட்டாய்.

                  வெம்மையால்

                  நீ அழியப் போவதை

                  நீருண்ட வெப்பமாய்

                  நெருங்கிச் சொன்னேன்.

                  அதைப் புரியாமல்

                 அதிலேயே

                  நோக்கமாய் இருந்தாய்.

                  அதற்கு

                  தாலியும் கேட்டாய்.

                  நான்

                  கட்டுப்பாட்டுக்குக்

                  கட்டுப்பட்டவன் என்பதால்

                  கட்டு மீறிய

                  உன் செயலுக்கு இணங்கவில்லை.

                  இன்று நீ

                  கட்டவிழ்ந்து போகின்றாய்.

                  அதை நான்

                  தட்டிக்கேட்கப் போவதில்லை.

                  ஏனென்றால்,

                  எனது இரகசியப் பூ

                  பூக்கும் முன்

                  உனது இரகசியம் தெரிந்ததுதான்.

 

21.         தூய்மையான

          காதல் கண்களில்

          தூசி விழுந்துவிட்டது.

          இனி,

          அது பயன்படுமோ?

          அழிந்து போகுமோ?

 

          மலராத நெஞ்சையும்

          மலரச் செய்து

          வளராத

          உன்

          காதலைக் காட்டிவிட்டாய்.

 

          ஆண்டுதோறும்

          மாறி மாறி வருகின்ற

          பருவ

          காலங்களைப் பார்க்கின்றேன்.

 

          ஆள்தோறும் மாறும்

          உன்

          உருவங்களை

          இப்பொழுதுதான் காண்கின்றேன்.

 

          எதுவானாலும்

          திருமணமென்று

          நான் பழகினேன்.

          அதுவில்லையென்று

          நீ காட்டினாய்.

 

          உதவாத உறவுகளை

          நினைத்து

          நான் அழுகின்றேன்.

          கூவத்தில் குளித்ததற்கு

          வெட்கப்படுகின்றேன்.

 

          அழியாத நினைவுகளால்

          அழிந்துக் கொண்டிருக்கின்றேன்.

 

          தகாத முறைகளில்

          பாழான என்னுடலைப்

          பாழாக்கப் போகின்றேன்.

 

          தெரியாமல் பழகியதால்

          உண்மை

          புரியாமல் தவிக்கின்றேன்.

 

          என்னைப்

          பிரியக் காரணம்

          சாதிதான் என்றால்

          அவன் எந்தச் சாதி?

 

          உறவு

          முறிய வேண்டுமென்றால்

          உண்மை தெரிய வேண்டும்.

 

          கனவு

          கலைய வேண்டுமென்றால்

          கருத்து தெரிய வேண்டும்.

          நீ,

          வாழ வேண்டுமென்றால்

          என் வழுவை

          அறிவிக்க வேண்டும்.

 

22.         எனைக் காத்த

          தென்றல்

          திருமணத்தில்

          புயலென வீசியதால்

          என் வாழ்க்கை

          திசை மாறிப் போனது.

 

 

23.         அவளுக்கு

          விடை கொடுத்தேன்

          என் அழகுக்குத்

          தடை விதித்தேன்.

 

          கனவுக்கு

          உயிர் கொடுத்தேன்

          நிஜத்திற்கு

          உடல் கொடுத்தேன்.

          ஊருக்கு அகலானேன்

          உலகிற்கு விழியானேன்

          என் மனதுக்கோ

          அலரானேன்.

 

24.         மயக்கத்தால்

          வழக்கிழந்து போகுமுன்

          பயத்தால்

          விழிப்புற்றேன்

          நயத்தால்

          வலைப்பேச்சில்

          சிக்குண்ட பின்னும்

          தயக்கத்தால்

          விலகாது இருந்தேன்.

          முழக்கத்தால்

          திசைமாறிப்போன பறவைக்கு

          இசைமாறி அமைத்தேன்.

          என்

          காதல் கவிதை.

 

25.         மாணிக்கக் கற்கள்

          விலை போகாமல்

          தேங்கிவிட்டன.

          உன்

          இருவிழிகளைப்

          பார்த்த பின்.

 

26.         திருமணத்திற்குப் பிறகு

          நம் வீட்டில்

          விளக்கேற்றுவாய்

          என நினைத்தேன்.

          நீயோ

          திருமணத்திற்கு முன்னே

          என் நெஞ்சில்

          விளக்கேற்றி விட்டாய்.

 

27.         பல

          வண்ணப் பூக்களுக்கும்

          நெஞ்சில்

          ஒரே வண்ணப் பூச்சு.

          இந்த

          வண்ணப் பூச்சிக்கு மட்டும்

          மனதில்

          எத்தனை வண்ணப் பூச்சு.

 

28.         என்

          மனத் தொலைபேசி

          எப்பொழுதும்

          உன்

          வீட்டுத் தொலைபேசியில்

          ஒலித்துக் கொண்டே இருக்கும்.

          நீ எடுக்கும் வரை.

 

29.         பச்சை வண்ணம்

          உடுத்தி வந்தேன்

          நீயோ

          சிவப்பு வண்ணம்

          உடுத்தி வந்தாய்.

          சிவப்பு வண்ணம்

          வேண்டாம் என்றேன்

          நீல வண்ணம்

          உடுத்திக் கொண்டாய்

          கலை வண்ணம்

          அறிந்த நான்

          தலைபிய்த்து ஓடுகின்றேன்.

 

30.         எந்தக் கன்னியிடமும்

          நான் பேசியதில்லை.

          அந்தக் கன்னியை

          பார்த்த பின் தான்

          என்

          கண்ணியை விட்டேன்.

 

31.         நீ

          கண்களுக்கு

          மை தீட்டினாய்

          அழகுக்காக

          என்

          முகத்தில்

          கரி பூசினாய்

          நான்

          அழுவதற்காக.

 

32.         கண்களை மூடிக் கொண்டு

          அவளை

          ஓவியம் வரைந்தேன்.

          அதுதான்

          தேசிய விருதைப் பெற்றது.

 

33.         அந்த

          வெள்ளை ரோசா

          அழகானது.

          அதனால்,

          நான் அதைத்

          தொடக்கூட இல்லை.

          ஆனால்,

          அதுவோ

          தன் முற்களால்

          என்னைக் குத்திவிட்டது.

          ஆகையினால்

          இன்று

          அந்த

          வெள்ளை ரோசா

          சிவப்பு ரோசாவாக

          மாறிவிட்டது.

 

34.         மாலைக்குள்

          மாறும் சூரியகாந்தி

          இன்று

          மார்வாடி கடைகளில்

          தூங்குகின்றது.

 

35.         என் இதயம்

          குளித்துக்கொண்டு இருந்ததால்

          சுகமாய் இருந்தது.

          இன்றோ

          படுத்துக்கொண்டு இருக்கிறது.

 

36.         சூரியகாந்தி

          நிலத்தைப்

          பார்க்கும் பொழுது

          நிலவு

          பௌர்ணமியாகிறது.

          கதிரவன்

          வரும்பொழுது

          இழந்த தன்னாடைகளைத்

          தேடிக் கொண்டிருக்கின்றன.

          ஆடைகளை

          இந்நாட்டு கோகுலர்கள்

          திருடிக் கொண்டதால்

          நிலவு

          வெளிச்சத்திற்கு வராமல்

          அமாவாசையாகவே

          வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

 

37.         இந்த

          இரகசியப் பூங்காவில்

          குறிஞ்சி பூத்தது.

          அதை,

          விவரிக்கும் போது

          கண்ணீர் பொழிந்தது.

          அதனால்,

          குறிஞ்சி வாடியது.

          என்

          நெஞ்சும் சாடியது.

 

38.         ஆல் விழுதினைப் போலுன்

          காலடி யானதோ

          ஆலிலையுதிர் கிளைபோலுன்

          பால்வினை போனதோ

          நாளொரு நிலை மாறுமுன்

          மனமென் நிலவோ

          காயது கனியாமுன்

          விதை தருவது முறையோ

          காற்றது சாய்க்கும் காயென்ன

          நிலைபெற் றெழுதுலியலுமோ.

 

39.         நான் சிற்பியல்ல - ஆனால்

          அழகான சிலை செய்தேன்.

          மருத்துவனல்ல – ஆனால்

          உயிரூட்டம் தந்தேன்.

          கவிஞனில்லை – ஆனால்

          கவிதையைத் தந்தேன்.

          உழவனல்ல – ஆனால்

          விதையைத் தந்தேன்.

          இசைமானல்ல – ஆனால்

          இசையைத் தந்தேன்

          எப்படி?

          நானொரு தந்தை.

 

40.         இனி

          இந்த ஆலமரம்

          விழுதுகளை

          நம்பப் போவதில்லை.

 

41.         எனது

          ஒளிமயமான

          வாழ்க்கையைக் காண்கின்றேன்.

          நான்

          பொழியும் கண்ணீர்க் குளத்தில்.

 

42.         என் மனதை

          அவளுக்கு விற்றுவிட்டேன்

          திரும்பப் பெறும் வசதி

          எனக்கில்லை.

 

43.         என் இதயம்

          எரிந்தபோது கூட

          சிறிதும்

          கண்ணீர் விட்டதில்லை.

          இந்த

          இடையூறுகளை

          நினைக்கும்போது….

 

44.         என்னைக்

          காதலிப்பவளிடம்

          உண்மையை மறைத்தேன்.

          அதனால்

          நன்மையை இழந்தேன்.

          வன்மையில்

          என்னை ஒருத்தி

          வாங்கிவிட்டாள்.

          உண்மையில்

          அவளுக்கு நான்

          கணவனில்லை.

 

45.         அறிவு முனையில்

          மைமுள் இருந்தது

          அழகு கவி தந்தது – அது

          அழகோவியமானது – இன்று

          தையல் வந்தாள் – அதற்கு

          உயிரைத் தந்தாள்

          உயிலாய் நின்று

          உலவ விட்டாள்

          கலையாய் நின்று

          கனவைத் தந்தாள்.

 

46.         தலைமேல் நாகம் – பட

          மெடுத்தாடும் – அந்தச்

          சிவனார் மகனார்

          காதல்  வள்ளியை

          தினைப்புறம் பார்த்தே

          வினைப்பெயர் காட்டி

          சினம்மிகக் கூட்டி

          கணம்சில போக்கி

          கான வாக்கியம்

          கானலெழும்பிட

          மான வள்ளியை

          மணந்தார் முருகனார்

          வான மெல்லிடை

          தந்தாள் என்னிடம்.

 

47.         சோலைகள்

          கல்யாணி பாடியது

          புன்னகவராளி கேட்டபின்

          எந்த ராகம் பாடும்…?

          நிச்சயம்

          வசந்த ராகமில்லை.

 

48.         அன்றொரு நாள்

          உன் வீட்டிற்கு

          வந்திருந்தேன்.

          வாசலிலே

          நீர்க்குளம் – அதுவுன்

          கண்ணீர்க்குளம்.

          கண்ணீர்க் குளத்தில்

          என் வீராப்பு

          கரைந்து விட்டதம்மா.

 

49.         அன்று

          நானும் அவளும்

          கடலலை நீரில்

          நடந்து

          போய்க்கொண்டு இருந்தோம்.

          எங்களின்

          பாதச் சுவடுகளை

          அலைக்கரங்கள்

          அழித்துக் கொண்டே வந்தன.

          அப்பொழுதாவது

          உணர்ந்திருக்க வேண்டும்…

          என்ன செய்வது?

          இன்று,

          என் பாதம் மட்டுமே

          மீண்டும் மீண்டும்

          கடலலையால்

          அழிக்கப்படுகின்றன.

          சில நேரங்களில்

          கடலலை கூட

          கருணை காட்டுகின்றன…

          ஆனால்,

          அவள் மட்டும்?

 

50.         விலையுயர்ந்த

          முத்துக்களை எடுக்கும்

          கடலின்

          கரையினில்தான்

          எங்கள்

          மடலின்

          பரிமாற்றம் நிகழ்ந்தது.

 

          அந்த

          முத்துக் கடலில்தான்

          அவளின்

          முத்துச்

          சிரிப்பைக் கண்டேன்.

          அதன்பின்,

          பித்தானேன் – அவளன்பின்

          சொத்தானேன் – இன்று

          வெத்தானேன் – அவளின்

          செருப்பானேன் – தேய்ந்த

          செருப்பானேன்.

 

51.         எழுதி எழுதிப் படித்தாலும்

          ஏறவில்லை மூளையில்…

          ஆனால்,

          அன்று, அவள்

          கண்ணால் எழுதியதை

          இன்னும் என்னால்

          மறக்க முடியவில்லை.

 

52.         என்

          பேச்சுக்கெல்லாம்

          சிரித்தாள்

          இன்று

          சிரிக்கின்றாள்

          அவளல்ல…

          நானொரு பைத்தியம்.

 

53.         எழுதலாமென்று

          வெண்தாளை எடுத்தேன்.

          மறு கையில்

          பேனாவை எடுத்தேன்.

          எழுதினேன்…

          எழுத்துக்கள்தான் இல்லை

          வெறுத்து,

          வீதிக்கு வந்தேன்.

          வானைப் பார்த்தேன்

          வானில்

          நிலவும் இல்லை

          என்ன ஆச்சர்யம்

          வீதியில் நிலவு

          ஓ… அவள்

          பதினாறு வயது

          பருவ மங்கை – பின்

          கண்ணோடு கண் நோக்கின

          என் மனமோ தாக்கின

          விரைந்தேன்

          தாளும் பேனாவும் எடுத்தேன்

          எழுதினேன்…

          ஆ, எழுத்துக்கள்…

          உணர்ச்சியில்

          புணர்ச்சி கொண்டன

          அடடா….

          அவள் கண்கள்தான் மையோ?

 

54.         எனக்கு

          உன் மீது காதல்

          என்னை

          ஏன்

          காதலிக்கின்றாய்

          என்று நீ

          கேட்கின்றாய்

          இதற்கு

          நானெப்படி

          பதில் சொல்வது.

          தாய்க்கு

          இவன்

          உன்மகனென்று

          அடையாளம்

          காட்ட வேண்டியதில்லை.

          உன் மகனிடம்

          இப்படித்தான்

          அன்பு செலுத்தென்று

          சொல்ல வேண்டியதில்லை.

          நானும்,

          அப்படித்தான்.

 

55.         உன் சிரிப்பு

          அன்றென்னை

          மயங்க வைத்தது.

          மயக்கத்தில் நடந்தேன்

          காலில்

          முள் குத்தியது.

          இன்னும்

          நீ

          சிரிக்கின்றாய்

          நான்

          மயங்குவேன் என்று.

          உணர்ந்துக் கொண்டேன்

          சிரிப்புக்கு

          அர்த்தங்கள்

          ஆயிரம்.

 

56.         எத்தனை முறை

          வைத்தேன்.

          அழித்துக் கொண்டே

          இருக்கிறாளே?

          சிந்தித்தேன்

          இறுதியில்

          நானே

          குங்குமம்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா