பொறுமை

 ஊன்றுகோல்

உறுதியானதென்று

விழுதுவிடாமல் இருந்துவிட்டேன்.

 

ஊன்றுகோல்

செல்லறிப்பக் கேட்டே

எங்கோ செல்கின்றேன்.

 

பிறருக்காகவே

கண்ணீர் வடித்த நான்

இன்று மட்டும் ஏன்? எனக்குக்

கங்கையாகின்றது.

 

கஷ்டத்திலும் சிரிப்பதற்கு

நஷ்டம் உண்டாக்காதே

என்று கூறும் என்னை

கஷ்டம், இஷ்டம் போல் ஆள்வதேன்.

 

எதிரிகளே இல்லாத எனக்கு

எதிர்நீச்சல் வாழ்க்கையிலே.

 

எல்லோருக்கும்

கஷ்டத்தில் பங்கு கொண்டேன் – என்

கஷ்டத்திற்கு...?

 

கஷ்டங்களையே துடுப்பாக்கித்

திடமனதை ஓடமாக்கி

கடலினிலே பயணம் செய்தேன்.

 

நடுவிலே பேய்க்காற்று

நாசமாய்ப் போவோமோ என்று

ஆடும் படகினிலே

ஆதரவைத் தேடுகின்றேன்.

 

உதவியினாலே

உல்லாசக் காற்று வாங்குகிறேன்

உதவியே இன்று

ஊசலாடும் போது

 

கோபத்திலும் சிரிக்கும் நான்

இன்று மட்டும் ஏன்?

 

சிந்திப்பையே

விந்தையாக்கி – அதையே

வித்தாக்கி

கவிதை எழுதுகின்றேன்.

 

கவிதையே என் வாழ்க்கை

கதையாகுமென்று நினைத்தேனா?

 

அழும் குழந்தையை நான்

அரவணைத்தேன் – என்னை

ஆதரிப்பார் இன்று?

 

வேதனை நமக்கது

சாதனை என்றேன்.

சாதனையே இன்று

வேதனைக்குச் சாதகமானதே.

 

ஊசி முனையில்

ஆடி மாதக் காற்றால்

பொங்கும் கடல் நடுவே

பொறுமையாய் இருக்கின்றேன்.

 

பொறுமை அதன்நிலை வறுமை

பொறுமை அதனாட்சி பொறாமை

பொறுமை அதன் சாட்சி வெறுமை

பொறுமை அதன் எல்லை விரட்சி.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா