கவிஞனின் காதல்
கவிஞன் காதலிப்பது
காவியம் மட்டுமல்ல
காவியையும்
சேர்த்தே அவன்
காதலிக்கின்றான்.
நாய்கள் குரைக்கும்போது
நாண்களைத் தேடும்
நாயக நாட்டினிலே
கவிஞன், அதன்
நாணயத்தை எழுதுகின்றான்.
உண்ட களைப்பால்
இளைப்பாருவதைவிட
கவிஞன், கண்ட
நினைவினையே
இனிப்பாக்குகின்றான்.
தென்றலுக்கு விலங்கு
பூட்டும் உரிமை
கவிஞனுக்கே உரித்தானது.
தென்றல்
அவனைத் தழுவும்
போதும்
தமிழ் ஆறு – அவன்
எழுதுகோல் விளிம்பில்
எழுச்சியோடு நிற்கும்.
எண்ணங்கள்
சிறகடித்துப்
பறக்கும்போது
– அவன்
கண்களிரண்டும்
தூங்க மறுக்கின்றன.
பெண்களின் மனம்
குமுறும் போதும்
இருமை விழியோரம்
ஆடிப்பெருக்கு
அணைகட்டி நிற்கும்
போதும்
அவன்,
எழுத மறுக்கும்
வாக்கியங்களும்
விடுதலை பெற்றுவிடும்.
ஓவியன்
கண்டதை
வரைகின்றான்.
எழுத்தாளன்
நினைத்ததை
எழுதுகின்றான்.
கவிஞன்
உணர்ச்சிகளை
உணர்வுகளை
உண்மைகளை
நினைவுகளை
நிகழ்வுகளை
நெகிழ்வுகளை
ஊக்கமோடு யூகத்தாலே
எழுதுகின்றான்.
Comments
Post a Comment