செல்லப் பிள்ளை வருகை

 பானுவின் வரவை நோக்கி

பாலகன் நான் நின்றேன்

பார்வைகள் எத்தனை எத்தனை

பாதகன் உன்னை வரவேற்க.


கடல்தாய் உன்திரு முகத்தை

கலங்காமல் காட்டிடவே

அலையாமல் நிற்கின்றாள்

பளிங்கு கண்ணாடி போலவே.


மல்லிகா மணம் வீசி எழுப்பிட்டாள்

மணக்கக் காரணம் கேட்டேன்.

வரும் கதிரவன் என்னை

வருடிட வேண்டியே என்றது.

 

நீராட குளத்திற்குச் சென்றேன்

செவ்விதழ் தாமரையவள்

செவ்வாயைப் பிளந்து – கூப்பிட்டே

நிற்கின்றாள் தன்னெழிலைக் காட்டி.

 

தேரையும் பசுங்கன்றும்

ஓதிடும் இனிய நாதம்

உன்வரவை வரவேற்க

இவர்கள் பாடும் சங்கீதம்.

 

ஏர்பிடித்த உழவனெல்லாம்

முந்திச் சென்றான் வயலுக்கு

ஏன்? உன்னெழிலை ஏற்க நிற்கும்

கதிரின் வளமையைக் காண.

 

கூடியிருந்த பறவைகளெல்லாம்

கூட்டமாய் சென்றது.

குலமகள் உந்தன் வரவிற்குக்

குறைவேண்டா மென்றே.

 

தென்றல் வந்து தீண்டலிலே

தெவிட்டாத தீங்கனிகள்

தென்னமுதப் பூஞ்சோலைகள்

மலர்கள் உதிர்க்கின்றன

உந்தன் பாதையிலே.

 

உன் வரவை நோக்கியே – நான்

கிழக்கு நோக்கி நின்றிட்டேன்.

செவ்வானம் செப்பிட்டது

செல்லப்பிள்ளை வருகிறானென்று.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா