உன் பெயர்

 

படுத்தால் உன் நினைவு

படித்தால் உன் கனவு

நினைத்தாலே சொர்க்கமடி – என்

நிலவுக் குயிலே.

 

குடிப்பது தண்ணீர்

படிப்பது கண்ணீர்

தெளிப்பது பன்னீர் – நான்

குளிப்பது உன்னன்பு நீர்.

 

நாமக்கென்று ஒரு வாழ்வை

பிரம்மன் எழுதிவிட்டான்

எமன் வந்து பிரித்தாலும் – அவன்

எட்டுக் காதம் ஓடிடுவான்.

 

காதலொன்றே வாழ்வென்றால்

காலற்றது போலாகும்

நாலும் சேர்ந்திருந்தால்

நாமொருவர் என்றாவோம்.

 

நுனிநா மேலண்ணம் ஒன்றி

நுட்பமாக எழுப்புகின்றேன்

மேலுதடும் கீழுதடும்

உறவுபேச அழைக்கின்றேன்.

 

கால்கொள்ளும் ராம மந்திரத்தில்

காலொன்றை இடம்மாற்றி

காலமெல்லாம் அழைத்திருப்பேன்

கணவனுக்குப் பொருளாவேன்.

 

கோவையான பல்லிடுக்கில்

தவழ்ந்தோடும் மென்சதையுடன்

மணியடிக்கும் உதடுகளில்

உறவாடி நான் வாழ்வேன்.

 

இருகரமும் நோகாமல்

இருக்கையில் அமர்த்தியே

இருதயத்தே குடிவைத்து

இருள்போக்கி வாழ்ந்திடுவோம்.

 

கவியதில் உன்னை வைத்து

காவியம் படைத்திடுவேன்

பாவியதில் ஒரு பாத்திரமாக

பாவலனாய் நான் வருவேன்.

 

இசையதனை நானெழுப்ப

வீணையது தோற்றதம்மா

வசையான வார்த்தைகளுக்கு

அசைபோட்டு விட்டேனம்மா.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா