ஓ… நிலவே
நிலவே
உனக்குப் பிள்ளைகள்
இல்லை என்பதால்
அம்மா, என்றழைக்க
முடியவில்லை.
உனக்குத் திருமணமே
ஆகவில்லை என்பதற்காக
ஆண்களின் மனதையேன்
தூண்டிலில் மாட்டி
துரும்பாக்கிப்
பார்க்கின்றாய்?
உன் அழகைக் கண்டு
எங்கள் தெரு விளக்குகளும்
கண்ணடிக்கின்றன.
உன்னை முத்தமிட
எங்கள் நாட்டு
இமயத்திற்கும்
ஆசை வந்தது.
சிவனின் தலையில்
இருப்பதால் தான்
எங்கள் சிந்தனையைக்
கிளருகின்றாயோ?
உன்னிதயத்தில்
குடிகொள்ள
அறிவியல் அறிஞர்கள்
குறி பார்க்கின்றார்கள்.
நீயொருவனுக்கே
சொந்தமானால்
சோதனைக்கு ஆளாக
மாட்டாய்.
கன்னிப்பெண்
உன் வருகையிலே
காளைகள்
இமைக்காது பார்க்கின்றனர்.
இளமைக்கு அமைதி
வேண்டுமென்று
தாளாட்டுப் பாடித்
தூங்க வைக்கின்றாய்.
ஓ… நிலவே
உனக்குத் திருமணம்
வேண்டாமென்று
ஒரு மனதோடே நின்றிடு.
ஏன்?
கன்னிப் பெண்ணாய்
எங்களைத் தாளாட்டும்போது
தாங்கொண்ணா மகிழ்ச்சியில்
தரணியில் இருக்கின்றோம்
துயிலும் கொள்கின்றோம்
அதிலும் உந்தன்
எழிலே உழல்வதேன்?
புரியாமல்
எழுதுகின்றேன்
– நான்
அழுவதற்கு முன்
புரிய வைப்பாயா?
Comments
Post a Comment