நீயே... நாடு


கண்ணு மேலே குளநீரு

கொட்ட ஏனோ தவிக்கிற

பொட்டல் போலே ஆனேனே

பொட்ட புள்ளே – நான்

பொட்டல் போலே ஆனேனே.

 

கண்ணத்திலே சிறுகிண்ணி

கடுகுக்குள்ளே கடல்நீரு

அடுப்புக்குள்ளே பூனைதான்

அடுக்காய் நீயும் சொன்னாயே.

 

பல் இடுக்கு சோறுதான்

ஈறாய் இன்று வளர்ந்ததுவோ?

முத்தைத் தேடி அலைந்தேனே

முகத்தை மூடி மறைப்பதேன்.

 

உப்பைத் தேடி அலைந்தேனே

ஆடை பிழிந்து தந்தாயே

நடையைப் பயில வந்தேனே

கோமா உன்னை தீண்டியதோ?

 

குயிலைப் பார்க்க வந்தேனே

குடத்தில் மிதக்கின்றாயே – நீ

குடத்தில் ஓட்டை கண்டேனே – அதனால்

முழுகாமல் நீயும் உள்ளாயோ?

 

தேனைப் புகட்டும் தேனாறு

தேளாய் நின்று இருப்பதுவோ?

தோளைக் குலுக்கி அழுவதேன்

தோகை மடிந்து போனதுவோ?

 

மண்ணை மறந்து திரிவதேன்

உன்னை நீ மறந்ததுவோ?

என்னை நீ பார்ப்பதேன்

எள்ளாய் இருப்பதுவோ?

 

ஒப்பு நோக்கப் பார்வையிலே

உன்னை நான் பார்க்கின்றேன்

இந்நாட்டையும் சேர்க்கின்றேன் – உன்னில்

நாட்டையே காண்கின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா