வேண்டும் உண்மை
அன்பையும் பண்பையும்
சேர்ந்து அளித்தேன்
உண்மையின் இன்மையை
எனக்கு அளித்தாய்.
விழியின் கதவினை
திறந்து வைத்தேன்
வழிப்போக்கர்
எல்லாம் குடி வைத்தாய்.
விழியின் போர்வையைத்
தொலைத்து விட்டு
வருத்தும் குளிரில்
வாடு கின்றேன்.
விழித்தே சிவந்த
விழி விளக்கை
ஆபத்து என்று
ஒதுக்கு கின்றாயோ?
என், அன்பெல்லாம்
பிழிந்து உனக்கு
உன்னிதய நோய்க்கு
மருந்து ஆக்கினேன்
ஊன்றி இருந்த
காலையும்
உதறி விட்டதாலே
– நான்
ஊன்று கோலைக்
கேட்கின்றேன்
உன் கைப்பிடித்
தாங்கலையே.
மெய் நிறைந்த
உயிர் இருந்தும்
பொய்யுரை பொழிவது
விதி விலக்கா?
பொய் திரைக்குள்ளே
மினுமினுக்கும்
மெய் என்றென்றும்
நிலைத்திருக்கும்
மெய்யாய் வாய்மை
இருந்து விட்டால்
பொய்யான வாழ்க்கை
இறந்துவிடும்
உறுதி நெஞ்சிலே
இருத்திவிட்டால் - அது
வாழ்வின் ஒளிக்குத்
தீபமிடும்.
உண்மையின் நிழலைக்
காட்டி வந்தால்
நிழலே கிடைக்காமல்
போவதுண்டு
உண்மையின் நகலைக்
காட்டி விட்டால்
உயிரைத் தந்தும்
வாழ்வளிப்பேன்
மெய்யெல்லாம்
மெய்யானால் – நான்
நெய்யாகி உனக்கிருப்பேன்
அகமெல்லாம் பொய்யானால்
– நான்
எரிமலையாய் வெடித்திடுவேன்
உண்மை வாழ்வின்
ஒளிப்பாதை
Comments
Post a Comment