ஒருநிலைப்படுத்துவது…

 

ஆசைகளுக்குத் திரையிடும் போது

பாசங்கள் சில சமயம்

பர்தா போட்டுக் கொள்வதுண்டு.

 

பர்தா போட்ட பாசங்களுக்குள்

நிலவு முகத்தின் ஒளியானது ஒளிர்வது

சில சமயம் நிறுத்தி வைப்பதுண்டு.

பசையான பாசங்களுக்குப்

பங்கங்கள் நேர்வதுண்டோ?

 

அலைகடலையும் அடக்கிவிடலாம்

அடைமழையையும் நிறுத்திவிடலாம்

ஆசையின் அடிமனதை…?

 

ஆசைக்கு

அடிமைப்பட்டு விட்டால்

பாசங்கள் விலை பேசும்

சில அற்ப நெஞ்சங்கள்

அற்ப நெஞ்சங்களின்

உள்ளங்களில்

ஊர்வலம் போகும்

காதலின்

கோலங்களில்

உதித்தவனல்ல நான்.

 

நடுத் தெருவில் சந்தித்து

நடுநிசியில் விட்டுவிடும்

காட்டுக் காமமல்ல என் காதல்.

 

காதல் புனிதமானது – அதில்

வாதங்கள் நிகழ்வதுண்டு

வாதங்களின் பிரதிபலிப்பு

சாதனையில் முடியும்.

 

ஊடல்களின் ஊர்வலம்தான்

காதல் நெஞ்சங்களின்

உல்லாச

போர்வை வாழ்க்கை.

 

உல்லாச வாழ்க்கையில்

ஆழமான அன்புகள்

அழிக்க முடியாததாக

இருந்திடல் வேண்டும்.

 

வாழ்க்கையில்

கும்பாபிஷேகம்

நடத்து முன்னே

நடைபாதை வாழ்க்கை

தேவையில்லைதான்.

அதற்காக,

ஆசைக்கு

விளக்கேற்றிவிட்டாய்

விளக்கிலே எண்ணெய் இல்லாமல்

ஒளி வாங்க நினைத்தேன்.

நல்லது,

யாருமில்லாத

தனிக்காட்டில் ஒரு

குடிசை அமைத்து

யாருமில்லாத இடத்திலே – என்

வாழ்க்கை ஒளியை அடக்கி

வைத்துக் கொள்கின்றேன்.

 

விளக்கை ஏற்றிவிட்ட – உன்

இல்லை, என்னிதய கைகளுக்கு

உயிரார்ந்த

ஆயிரம் முத்தங்கள்

மழை மாறிப் பொய்கின்றேன்.

 

இழையாய் நான்

மெலிந்து போகும்போது

ஏழையாய் நான்

பிச்சை எடுக்கும் போது

பாசம் உன்னிடம்

இருந்தது என்றால்

நெஞ்சில் ஈரம்

இருந்ததென்றால்

உள்ளத்தில் நினைவு

இருந்ததென்றால்

உரமூட்ட வந்தால்

மகிழ்வோடு ஏற்பேன்.

 

என் கோபங்கள்

கோயில் புறா தான்

வீட்டுப் புறா அல்ல.

 

கோபத்தை மூலஸ்தானத்தில்

வைத்தா உன்னை

பூஜித்து வந்தேன்.

 

என் மனம்

கலங்கும் போது

உன் மனம் திடமானதாக

இருக்க வேண்டும்

அதைத்தான் நான்

எதிர்ப்பார்த்தேன்.

இன்று, என் மனம்

கலங்கிவிட்டது – அதற்கு

உன் மனம் திடமானதாக

இருக்க வேண்டும் தான் – ஆனால்

நீரில் கலந்த

எண்ணெயாக இருந்தால்

இல்லை கவலை.

நானோ இன்று

சேற்றிடை புகுந்த

நீராயன்றோ

சிக்கித் தவிக்கின்றேன்.

 

என் மனதை

ஒருநிலைப்படுத்தவே

உன்னை, வேண்டினேன்

மறுக்கின்றாய்.

 

தவறு, என்னுடையதுதான்

இருப்பினும் – மனம்

சேற்றில் சிக்கித் தவிக்கின்றது.

 

என்னை

என் மனதை

ஒருநிலைப்படுத்த

என்னை நானே

ஒருநிலைப்படுத்த

இன்று முதல்

உண்ணா நோன்பு

உறுதியுடன் ஏற்றேன்.

என் மனம்

ஒருநிலை அடையும் வரை.

 

தவறாக

நடந்திருந்தால்

பேசியிருந்தால்

என்னை மன்னித்துவிட்டு

உன் மனம்போல் செய்.

 

என் அன்புகளை

அமுத சுரபியில்

சேர்த்து வைத்து

யாருக்கும் அளிக்கவில்லை

தமிழுக்கும் உனக்கும் தவிர.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா