கவிதை ஒரு தீவு அல்ல
விண்ணிலே வீடு
கட்டி
வீதியுலா வருவான்
வீதியில்லா இடத்திலே
வைத்த இடம் பார்ப்பான்
வைத்த இடம் நோக்கியே
வந்த இடம் தேடுவான்
வந்த இடம் தேடியே
வேறுலகம் செல்வான்
– கவிஞன்
வேறுலகம் செல்வான்.
நிலவுக்கு முத்தமிட
நிலத்தில் நிற்கின்றான்
நிலவோ அங்கே
இவனோ இங்கே
நிலையில்லாத அவன்
எண்ணங்களுக்கு
நீண்ட எழுதுகோல்
நித்தம் உதவுகின்றது.
ஓர் எள் உருண்டை
செய்து
ஊருக்கே கொடுத்திடுவான்
ஒரு மூட்டை எள்
உருண்டை
தனக்கே போதாதென்பான்.
எறும்பை யானையாக்கி
யானையை எறும்பாக்கி
குறும்பை பெரிதாக்கி
விஷமத்தைக் குறும்பாக்கி
நயமாய் விட்டுவிடுவான்
– கவிஞன்
நயமாய் விட்டுவிடுவான்.
அவன் பேனாவிலே
வெடிகுண்டு வைத்தாலும்
வேகமாக எழுதிடும்
வெடிகுண்டு அழுதிடும்.
கவிஞனைச்
சிறை வைத்தால்
சிறைக் கம்பிகளும்
கவிதை பாடும்.
பிறப்பிலே கவிஞன்
இல்லை
வளர்ப்பிலே கவிஞன்
இல்லை
தனிமையிலேதான்
– கவிஞன்
உருவாகின்றான்.
அறிந்ததைவிட
அறியாததோ உலகளவு
எனவே தான், கவிஞன்
உலகினையே தன்
கற்பனைப் பாத்திரமாக்குகிறான்.
பிறக்கும் குழந்தைக்கு
மொழி, இனப்பாகுபாடு
தெரிவதில்லை
கவிதை எழுதப்படும்போது
கவிஞன் குழந்தையாகின்றான்.
ஒவ்வொரு தீவும்
கவிஞனின்
ஒவ்வொரு எழுத்துக்கள்
தீவுகளின் சங்கிலியாலே
கவிஞன் – தன்
குழந்தையைப் பெற்றெடுக்கிறான்.
கவிஞனின் குழந்தைக்குச்
சட்டம் விதிக்கப்படுமாயின்
அது, எரிமலைக்
குழம்பாய்
வெடித்துக் காட்டும்.
கனவு அது நிலையல்ல
உண்மை அது பொய்யல்ல
நன்மை அது தீமையல்ல
Comments
Post a Comment