ஏக்கங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன

ஏழைகளின்

ஏக்கங்கள் இங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

சோற்றுக்குப் பஞ்சம் பாடிவிட்டு

வயிற்றுக்கு லஞ்சம் வேண்டி

சாராயக் கடைக்குச் செல்லுகின்றான்.

 

கூவம் நதிக்கரையில்

கூவல்களின் ஓசைதான்

இந்த நாட்டின் எதிரொலிகள்

 

அவர்கள் வீடுகளில்

செல்வம் சேரவில்லையாயினும்

பகலவன் தினம் குடிகொள்கின்றான்.

 

அவர்கள் வீடுகளில்

ஆயிரம் விளக்குகள்

அணையா தீபங்கள்.

 

நோய்களையே நண்பனாக்கி

நாயாக உழைத்திடும் இந்தச்

சமுதாய வர்க்கங்களின்

ஏக்கங்கள் இங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

பொழுதெல்லாம் உழைத்தவர்களுக்குப்

போஸ்ட்டர்களே போதை மருந்தாகி

பிளாட்பாரத்தின் பேடையாகின்றான்.

 

ஆடையிலுள்ள அழுக்குகள்

வட்டமேசை மாநாடு போடுகின்றன.

 

நிலவிற்குக் குடி பெயர

அங்குத்

தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

வியர்வை சிந்திப் பெற்ற பணத்தை

வியர்வை சிந்தியே விடுகின்றான்

சினிமாக் கொட்டகைக் காரனிடம்

குடிசைக்குச் சென்சார் போர்டு மாட்டிவிட்டு

பட்டு மெத்தையின் சுகத்திற்காகப்

பட்ட மரமாக மாறுகின்றாள்.

 

பொன் நகைகளை விட

புன்னகைகளுக்கே

ஏக்கங்கள் பல கோடி.

 

மூன்று ரூபாய் கொடுத்துவிட்டு

மூன்று மணி நேரத்திற்குள்

முந்நூறு ஏக்கங்கள் இங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

கோழி கூவியாச்சு

பொழுது விடிஞ்சாச்சு

என்ற

காலம் மாறிப் போனதால்

கூவத்தின் புலம்பல்கள்

சென்னையின் அலாரமாச்சு.

 

விதவித ஆடைகளுக்கு

விதவிதமான ஆசைகள்

விதவித துண்டுகளை

வகையாய் ஒன்றுபடுத்தி

ஆசையின் ஏக்கங்கள்

இங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

சோற்று வடிநீரை விட

கண்ணீர் தான்

பானையில் மிஞ்சும்.

 

திருமண நாட்களில்

தெருவோர சமுதாயத்திற்குத்

திருவோட்டின் ஏக்கங்கள் இங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

படகுகளில் பவனிவர

பட்டு மெத்தையில் துகில் கொள்ள

அமாவாசையில் நிலவாகின்றாள்.

 

சமுதாயச் சதுரங்க விளையாட்டில்

நான் பெற்ற தாயம் ஏழை.

 

எங்களின் ஆசைகள்

என்றும் வினாக்குறிகளே

 

எங்களின் ஏக்கங்கள்

என்றும் தீர்க்க முடியாதவைகளே

 

எங்களின் கனவுகள்

என்றும் மின்மினிப் பூச்சிகளே

 

கோமதி இராஜ்யத்தில்

கோவலனைக்

 கோலி விளையாடியதால்

மதுரையே தீப்பிழப்பானது.

 

கண்ணகியின் ஏக்கங்கள்

தீப்பிழம்பில் அல்லவா

தாக்கல் செய்யப்பட்டன.

 

இன்று, கன்னிகளின் ஏக்கங்கள்

சீப்பிழுப்பில்,

சிங்காரத்தில் அல்லவா

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

கன்னிகள்

கண் இமைக்கு மைதீட்டுவதால்

கண் இமைக்க வைக்கின்றாள்

எங்களின் ஏக்கங்கள் – அங்குத்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

வறுமை,

கன்னிகளை வாட்டுவதால்

அவர்களின் ஏக்கங்கள்

எங்களிடம் தான்

தாக்கல் செய்யப்படுகின்றன.

 

சுமுகமாய் மாறிவரும் இந்தச்

சமுதாய ஏக்கங்கள் எல்லாம்

ஏழைகளின் குடிசைக்குள் தான்

தாக்கல் செய்யப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா