கலங்கரை விளக்கு
வானம் கருகி
கருங்கடலான போதும்
நீ மட்டும் ஏன்
அசையாமல் நிற்கின்றாய்?
கலம் கலங்கி
நின்ற போதும்
நீ மட்டும் ஏன்
கலையாமல் நிற்கின்றாய்?
வானை மடித்து
ஊது புனலாக்கி
ஊதினாலும்
கேட்காதோ எங்கள்
புலம்பல்கள்…
நீ
செவிடாய்
இருப்பதால்தான்
நீல
வண்ண லீலைகள்
வட்டமிடுகின்றனவோ…
கண்ணிருந்தும்
ஏன்
கவனிக்க
மறுக்கின்றாய்?
முனிவர்
என்ற
நினைப்பா?
உன்
மனதில்…
உச்சி
மீது
இடி
விழுந்த போழ்தும்
உபாதை
இல்லையென்று
உறுதியுடன்
நிற்கின்றாயோ?
உதவிக்கு
நானென்று
உபாதைகளிலிருந்து
விலகியே…
வாழ்கின்றாய்
நீ
மௌனம்
எதற்கும்
நல்லதென்று
சத்தியாக்கிரகம்
செய்கின்றாயோ?
காற்றடித்தால்
உதிர்ந்துவிடும்
தனிமரக்
கிளைகள்…
எங்களின்
மனங்களைப்போல…
பேய்க்காற்றடித்த
போதும்
தனியாய்
நிற்கும்
அந்தத்,
துணிவையாவது
எங்களுக்குச்
சொல்லமாட்டாயோ?
Comments
Post a Comment