வளரும் சமுதாயம்
கட்சிக் கொடிக்குச் சலங்கை கட்டி
வீதியெல்லாம்
மேடையாக்கி
சின்னங்களை வண்ண
விளக்காக்கிக்
காற்றினிலே நடனம்
ஆடுகின்றாள்
இன்னும்,
அரங்கேற்றம் நடைபெறாமலே.
விளம்பரம் பெருகிடவே
மதில் சுவரினிலே
மண்டியிட்டு
அன்பருக்கே ஓட்டென்று
ஒட்டியே இருக்கும்.
பசியால் வாடிட்ட
– பாவம்
அந்த மாடுகளுக்கு
- இன்று
வசந்த காலம் வந்தது
ஒவ்வொரு வாசலிலும்
நின்றது.
அந்தக் கூவம்
நதிக் கரையிலே
அலங்கோல வாழ்க்கைக்கு
- இன்று
அலங்கார விளக்கு
வந்தது - இது
கலங்காமல் என்றும்
இருக்குமா?
மலர்க்கொடிகளைக்
கண்டிராத
மரங்களெல்லாம்
- இன்று
மலர்ச் சரணங்களாய்
வரவேற்று நிற்பது – அந்த
மார்வாடிக் கொடிகளைத்
தானே?
பேருந்துகள் போட்டியிட்டுப்
பழுதாகிப் போனதாலே
பாதையிலே ஓட்டமே
இல்லை – இன்று
போதையாலே நாட்டம்
வந்தது.
சமுதாயக் கூண்டினிலே
பிண்ணப்பட்ட கம்பிகளின்
அளவுகள்
வேறுபட்டு இருப்பதாலே
சாதி மத வேறுபாடுகள்
நீரூற்றி வளர்க்கப்படுகின்றன.
வரத்தை தட்சணை
வைத்ததாலே
இராமன் காட்டிற்குச்
சென்றான் – இன்று
வரதட்சணை கேட்கப்படுவதனாலே
பெண்ணினம் காவிரிக்கு
உதவி செய்கின்றது.
பஞ்சக் கோட்டை
தாண்டினாலும்
வஞ்சி மகனின்
வஞ்சக் கோட்டை
தாண்ட முடியாமல்
பத்தினிப் பெண்கள்
இன்று
பதிவிரதம் இருக்கின்றார்கள்.
மஞ்சக் கொல்லை
நிலத்தினிலே
மானாவாரி விதைத்ததுபோல்
விண்வெளிப் பார்வைகள்
கன்னிகளைச் சுடுகின்றன.
தரம்கெட்ட சமுதாயத்தில்
தகடுகளின் ஓசைகள்தான்
தரணியை ஆளுகின்றன
பரணியும் பாடுகின்றன.
Comments
Post a Comment