ஊர்வலங்கள்
வளம் குன்றிய நாட்டில்
ஊர்வலம்தான்
உழைப்பின் கருவூலங்கள்.
உண்மை அதன்
தன்மை கெட்டது
வாய்மை என்னும்
வாய்ப்பாடு மாறியதாலே.
பொய் என்னும்
பொன் வாக்கு
பண்போடு வளர்க்கப்பட்டது.
அது,
இரத்தத்திலே பிறந்து
இரத்தத்திலே வளர்ந்து
இரத்தத்திலே வாழும்
இரத்தத் திலகமல்லவா?
வளம் குன்றிய
இடத்தில்
ஊர்வலம்தான்
உழைப்பின் கருவூலங்கள்.
புண்ணியத்தாய்
விடுதலைக்கே
புத்துணர்ச்சி
ஊர்வலம்.
ஊர்வலம் அல்ல
அது
இந்த நாட்டு மக்களின்
இந்தியத் தாயின்
பிள்ளைகள்
கொடுமையை நினைத்தே
எடுத்த போர்க்கோலம்.
உற்பத்தி செய்யாமலே
ஊதிய உயர்வு கேட்டு
ஊர்வலம் செல்லும்
உழைப்பாளி வர்க்கம்
ஒரு பக்கம்.
உற்பத்தி செய்து
ஊதிய உயர்வு கேட்டே
ஊர்வலம் செல்லும்
உழைப்பாளி வர்க்கம்
மறுபக்கம்.
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
கொள்கையே இல்லாத
ஊர்வலங்கள் இன்னும்
பல
வளம் குன்றிய
இடத்தில்
ஊர்வலம் தான்
உழைப்பின் கருவூலங்கள்.
துள்ளியாடும்
மான்களுக்குப்
புலியைக் கண்டே
தூக்கம் போனது.
நெலிந்து ஆடும்
நட்சத்திரங்களுக்கு
நகைக்சுவை விழா
ஊர்வலம் என்னும்
பெருவிழா.
பெற்ற பட்டங்கள்
வெற்றாக இருப்பதால்
சங்கங்கள் பிறந்தன.
சங்கங்கள் கொண்டாடும்
பொன்விழா
ஊர்வலத்தில் ஆரம்பமானது
பட்டமொன்றைப்
பெற்றதாலே
பாட்டன் தொழில்
மறந்து
வாட்டமுடன் நின்றிருக்க
வீதியிலே ஊர்வலம்.
பட்டம் என்னும்
அர்ச்சனைப் பூக்களே
ஊர்வலத்திற்கு
வரவேற்பு அளிக்கும்.
எறும்புக்கு உள்ள
சுறுசுறுப்பு
பறவைக்கு உள்ள
விருவிருப்பு
முயலுக்கு உள்ள
புத்தி கூர்மை
ஆமைக்கு உள்ள
அமைதி
நம்மிடம் இருந்தால்
– நம்பலாம்
ஊர்வலம் என்னும்
ஊர்ச்சுற்றிப்
பாத்திரம்
அடமானக் கடையிலே
வைத்துவிட்டு
அட, மானக் கடலிலிருந்து
அடியோடு மீள முடியுமென்று.
Comments
Post a Comment